கல்வி என்ற ஆயுதத்தால் உலகை ஆள முடியும் அமைச்சர் பெரியசாமி பேச்சு
தேனி: ”கல்வி என்ற ஆயுதத்தால் மட்டும் உலகை ஆள முடியும், அறிவுச் செல்வம் முக்கியமானது” என, தேனி புத்தகத் திருவிழாவின் துவக்க விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேசினார்.
தேனி பழனிசெட்டி பட்டி மேனகா மில் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ம் ஆண்டு புத்தக திருவிழா நேற்று துவங்கியது. விழாவிற்கு அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலை வகித்தார். அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தில் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கல்விக்காக முதல்வர் ரூ.47 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். விளையாட்டுத்துறை நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. கல்லுாரி மாணவர்கள் அரசு தரும் உதவித் தொகையில் புத்தகங்கள் வாங்கி படிக்க வேண்டும். புத்தகங்கள் படித்தால் உயர் அதிகாரிகளாக வர முடியும். எதனை வழங்கினாலும் அழிந்து விடும். கல்வி என்ற ஆயுதத்தால் மட்டும் உலகை ஆள முடியும். அறிவுச்செல்வம் முக்கியமானது.
இந்த புத்தகத் திருவிழாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’, என்றார். இந்த புத்தக திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு ஏற்பாடு
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ. 100க்கு புத்தகங்கள் வாங்கி கொள்ள டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.200க்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கும், கல்லுாரி மாணவர்கள் 3 ஆயிரம் பேருக்கும் டோக்கன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில் எம்.எல்.ஏ., மகாராஜன், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, திட்ட இயக்குநர் அபிதாஹனீப், ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, பி.ஆர்.ஓ., நல்லதம்பி, தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் கலைச்செல்வி, நகராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.