ஆண்டிபட்டி அருகே சிறுத்தை நடமாட்டமா
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பழைய கோட்டையில் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. வனப்பகுதியில் இருந்து ஆடுகளை கடித்த விலங்கு சிறுத்தையா அல்லது நாய்களா என்று தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பஞ்சன் 50, தனது தோட்டத்தில் 3 ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.
நேற்றுமுன்தினம் காலை 10:00 மணி அளவில் மூன்று ஆடுகள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் இறந்த ஆடுகளை உடல் பரிசோதனை செய்தனர். வனத்துறையினர் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள இப்பகுதியில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
பகலில் வனவிலங்குகள் வெளியில் வருவது அபூர்வம். இப்பகுதியில் சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லை. ஆடுகளின் உடல்களும் குதறப்படவில்லை. தற்போது அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.’, என்றனர்.