ரூ.46 லட்ச ம் செலவில் மின்கம்பம் டிரான்ஸ் பார்மர்கள் மாற்றம்
போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் விலக்கு – அரசு போக்குவரத்துக் கழக டெப்போ வரை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களை தினமலர் செய்தி எதிரொலியால் ரூ.46 லட்சம்செலவில் மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
போடி – தேவாரம் செல்லும் ரோடான மேலச் சொக்கநாதபுரம் விலக்கில் இருந்து போடி அரசு போக்குவரத்து கழக டெப்போ வரை 2 கி.மீ., தூரம் 30 அடி ரோடாக இருந்தது. இந்த ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்பு இருந்ததால் ஆட்டோ, கனரக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.
இதனை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.10.5 கோடியில் மேலச்சொக்கநாத புரம் விலக்கில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக டெப்போ வரை ரொடு 45 அடியாக அகலப்படுத்தி, 3 பாலம், நாககவுண்டர் ஊருணி ஓடை வரை தடுப்புச்சுவர், சென்டர் மீடியட் அமைக்கப்பட்டன.
பணிகள் முடிந்து 10 மாதங்கள் ஆகியும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களை அகற்றவில்லை.
விளக்கு வசதி இல்லாததால் இரவில் வாகனங்களில் வேகமாக வரும் போது ரோட்டின் நடுவே இருந்த மின்கம்பம் தெரியாத நிலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டன.
பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாதம் ‘தினமலர் நாளிதழில்’ படத்துடன் செய்தி வெளியானது.
இச் செய்தியின் எதிரொலியால் நெடுஞ்சாலை துறை மூலம் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களை அகற்றி ரூ.46 லட்சம் செலவில் மேலச் சொக்கநாதபுரம் விலக்கு -அரசு போக்குவரத்து கழக டெப்போ வரை புதிதாக 48 மின் கம்பங்கள், 4 டிரான்ஸ்பார்மர்கள் மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.