கும்பக்கரை அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்; கோடை விழா, மலர் கண்காட்சி நடத்த எதிர்பார்ப்பு
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்டது கும்பக்கரை அருவி. பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. கொடைக்கானல், மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்து செல்கின்றனர். தற்போது அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
அருவியிலும், அதற்கு மேற்புறம் 300 மீட்டர் துார நீரோடையிலும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குளிக்கும் வசதி உள்ளது. நுழைவு வாயிலில் இருந்து அருவி வரை 400 மீட்டர் தூரம் உள்ளது. அருவிக்கு செல்ல இரு பேட்டரி கார்கள் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் மேடான பகுதியில் பேட்டரி கார் செல்ல முடியாததால் ஓரங்கட்டப்பட்டுள்ளது. குடும்பத்தோடு வரும் சுற்றுலா பயணிகள், முதியோர் அருவி பகுதிக்கு செல்லசிரமம் அடைகின்றனர். வனத்துறை நிர்வாகம் சுற்றுலா பயணிகள் சென்று வர வேன் வசதி செய்து தர வேண்டும். கீழ வடகரை ஊராட்சி நிர்வாகம் வாகனங்களுக்கு கட்டணமாக மாதம் ரூ.லட்சக்கணக்கில் வசூல் செய்கிறது. வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்படுகிறது. கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது.
இங்கு ஒரு ஏக்கரில் அரியவகை மூலிகை மரங்கள், மூலிகை செடிகளை வனத்துறை பராமரித்தது. தற்போது பராமரிப்பின்றி பூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்.,8 ல் வன உயிரின வாரவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் கட்டணமின்றி அருவியில் குளிக்க அனுமதி. இதே போல் கோடை விழா,மலர் கண்காட்சி விழா நடத்த வேண்டும். பூங்கா மற்றும் விளையாட உபகரணங்கள் இல்லை. நிறைவேற்றினால் பயணிகள் எண்ணிக்கை உயரும்.
மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் கும்பக்கரை அருவிக்கு வருவது அதிகரித்துள்ளது. இவர்கள் செல்வதற்கு சாய்வு தள படிக்கட்டு அமைக்க வனத்துறை காலதாமதம் செய்கிறது.
ரமேஷ் (மாற்றுத்திறனாளி) வத்தலகுண்டு: குற்றாலத்தில் உள்ளது போல் படிக்கட்டில் சாய்வுதளம் வசதி செய்து தர வேண்டும். எங்களுக்கும் அருவியில் குளிப்பதற்கு ஆசையாக உள்ளது என்றார்.
இது குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘கும்பக்கரை அருவியில் கூடுதலாக அடிப்படை வசதிகள் செய்திட மதிப்பீடுகள் தயார் செய்து அனுப்பியுள்ளோம். தமிழக பட்ஜெட் தொடருக்கு பின் நிதி கிடைக்கும் என நம்புகிறோம்.-