வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கிராமங்களில் களப் பயிற்சி
தேனி, மார்ச் 27: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி குள்ளப்புரம் வேளாண்தொழில்நுட்ப கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவிகள் அம்ரிதா, மதிவதனி ஜெகத், சுபாஷினி, சன்மதி, ஷிவானி, பிரவினா, மோனிஷா, எழில் நிலவு, நிஷாலினி, ஜனனி, லின்சி, திலகவதி உள்ளிட்ட மாணவியர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் களப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில், திண்டுக்கல் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, குறைகளை எடுத்து கூறுவது, விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும், எந்த எந்த காலங்களில் எந்த பயிர்கள் பயிரிடலாம் என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளிடம் எடுத்து கூறியதை கேட்டறிந்தனர்.
வாரந்தோறும் திண்டுக்கல்லில் நடைப்பெறும் இயற்கை வேளாண் சந்தைக்கு சென்று, விவசாயிகளுடன் கலந்துரையாடி இயற்கை முறை விவசாயத்தை பற்றி தெரிந்து கொண்டனர். உலக தண்ணீர் தினமான மார்ச் 22ல் ஆத்தூர் தொடக்கப்பள்ளியில் தண்ணீர் சேமிப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக களப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள மாணவிகள் திண்டுக்கல் கலெக்டர் சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.