Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

fஜல்லி , எம் .சாண்ட் விலை நிர்ணயம்; அதிகாரிகள் நடவடிக்கை தேவை

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி பகுதியில் குவாரிகள், கிரஷர்களில் விற்பனை செய்யப்படும் எம் சாண்ட், ஜல்லி ஆகியற்றில் விலை நிர்ணயம் தெரியாததால் பொது மக்கள் பாதிப்படைகின்றனர்.

ஆண்டிபட்டி பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட குவாரிகள், கிரஷர்கள் உள்ளன. குவாரிகள் வேலை நிறுத்தத்தால் கட்டுமான பொருட்களான ஜல்லிக்கற்கள், எம் சாண்ட் ஆகியவற்றின் விலை உயர்ந்தது. கிரஷர்களில் அரை இஞ்ச், ஒன்றரை இஞ்ச், முக்கால் இஞ்ச் அளவுகளில் ஜல்லிகள், எம் சாண்ட், பி சாண்ட் ஆகியவை தயாரிக்கப்பட்டு இருப்பில் வைத்து விற்பனை செய்கின்றனர். கனிம வள பொருட்களை ஓரிடத்தில் இருந்து தேவையான இடத்திற்கு கொண்டு செல்ல ‘டிரான்சிட்’ என்னும் நடைச்சீட்டு கனிம வளத்துறை மூலம் பெற வேண்டும்.

நடைச்சீட்டு பெறுவதில் ஏற்படும் கால தாமதத்தை காரணம் காட்டி, குவாரி உரிமையாளர்கள் ஜல்லி, எம் சாண்ட், பிசாண்ட் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு இருப்பது போல் செய்து, விலையை உயர்த்தி விற்பனை செய்வதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கட்டுமான ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு யூனிட் ரூ.3500 ஆக இருந்த எம் சாண்ட் விலை தற்போது ரூ.5000 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் ஒரு யூனிட் ரூ.2800 ஆக இருந்த ஜல்லி தற்போது ரூ.4000 ஆக உள்ளது. அரசின் நடைச்சீட்டால் ஏற்படும் விலை உயர்வு குறித்து பொதுமக்களுக்கு தெரியவில்லை. கட்டுமானத்திற்கு தேவையான எம் சாண்ட், ஜல்லி ஆகியவை உரிய விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச்செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *