வீரப்ப அய்யனார் சித்திரை திருவிழா கோலாகல கொண்டாட்டம்
தேனி வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரியின் கார் இடையூறாக நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
இக்கோயில் சித்திரை திருவிழா மார்ச் 29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அல்லிநகரம் வீரப்ப அய்யனார் சுவாமி, நேற்று முன்தினம் பங்களாமேடு சோலை மலை அய்யனார் கோயிலுக்கு, குதிரை வாகன அலங்காரம் செய்யப்பட்ட அய்யனார் வீதி உலா நடந்தது. பக்தர்கள் காவடியுடன் சென்று திரும்பினர்.
நேற்று அல்லிநகரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு புறப்பட்டார். மலைக்கோயில் செல்லும் ரோட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு மலர்கள், மலர் மாலைகள் வழங்கி வழிநெடுகிலும் சுவாமிக்கு பூஜைகள் நடந்தன. திருவிழாவை முன்னிட்டு கார்கள், டூவீலர்கள் நிறுத்த தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
டூவீலர்கள் நிறுத்தும் இடம் நிரம்பியதால், சிலர் ரோட்டில் நிறுத்திச் சென்றனர்.
பல்வேறு அமைப்பினர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம், பானகம், தண்ணீர், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.