மாடித்தோட்டத்தில் மருத்துவ குணம்மிகுந்த ஏழு வகையான துளசிகள்
பெரியகுளம் தென்கரை மாரியம்மன் சன்னதி தெரு சுப்பிரமணியன் சுபமீனாட்சி தம்பதி. தோட்ட மேற்பார்வையாளர் தனிஸ்லாஸ் ஆகிய மூவரின் கூட்டு முயற்சியால் இல்லத்தை பசுமை இல்லமாக மாற்றி, மாடித்தோட்டம் அமைத்துள்ளனர்.
ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்ட இந்த மாடித் தோட்டத்திற்கு ‘பிருந்தாவனம்’ என பெயரிட்டுள்ளனர். 5 அடி உயரம் 4 அடி அகலமுள்ள 7 தொட்டிகள், சிலாப் அமைத்து வரிசையாக செடிகளை வரிசைகட்டி வைத்துள்ளனர்.
இங்கு ஏற்பட்டுள்ள பசுமையாலும் காற்றின் ஈரப்பதம் காரணமாகவும் அடிக்கடி பறவைகள், புறாக்கள் கூட்டம் இளைப்பாறிச் செல்கின்றன.
ஒற்றை இணுக்கிலே நறுமணம் தரும் கறிவேப்பிலை, மருத்துவ குணம் நிறைந்த சீர்பச்சிலை, பச்சிலை, துாதுவளை,வெற்றிலைக்கொடி, நந்தியாவட்டை, நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி என 7 வகையான மருத்துவ குணம் மிகுந்த துளசிகள் மாடித்தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன.
செவ்வரளிப் பூ மரத்தில் எண்ணற்ற பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
முடக்கத்தான் கீரை, பசலைக்கீரை, புதினா கீரை, பாலக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை உட்பட பத்து வகையான கீரை வகையில் தொட்டியில் ஊடு பயிராக பயிரிட்டு உள்ளனர். பலா கன்று நடுவதற்கு ஏராளமானவை தயாராகி வருகிறது.
அமைதியான தியானம்
சுப்பிரமணியன்: 20 ஆண்டுகளுக்கு முன் மாடித்தோட்டம் அமைத்தோம். கறிவேப்பிலையில் துவங்கியது தற்போது நுாற்றுக்கணக்கில் பெருகியுள்ளது. காலை, மாலை நேரத்தில் மாடித்தோட்டத்தில் துளசி செடிகளின் நடுவே அமர்ந்து தியானம் செய்வோம். மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாடித்தோட்டத்தில் துாய்மையான காற்று பரவி கிடக்கும். ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடிகள் இருந்தால் நன்மை பெருகுவதுடன், தீமை அண்டாது. எனவே துளசி செடிகளை வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக 500 க்கும் அதிகமான துளசிசெடி நாற்றுகள் இலவசமாக வழங்கி வருகிறோம். கீரை வகைகளை சமையலுக்கும், வாழை இலையில் பச்சையம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாலும், இளநரையை தடுப்பதாலும் மாடித்தோட்டத்தில் விளையும் வாழை இலையில் மட்டுமே பெரும்பான்மையான நேரங்களில் சாப்பிடுகிறோம். செவ்வரளி பூக்களை அருகே உள்ள கோயில்களுக்கு வழங்கி வருகிறோம்., என்றார்.
இயற்கை உரம் தயாரிப்பு
சுப மீனாட்சி: வெளியில் இருந்து எந்த உரமும் வாங்குவதில்லை. தோட்டத்தில் விழுகின்ற இலைகள், காய்கறி கழிவுகள், மாட்டு எரு, ஆட்டு எருவை மக்கச் செய்து இயற்கை உரமாக பயன்படுத்துகிறோம். வாழைப்பழ தோல், காய்கறி கழிவுகளை பயன்படுத்துகிறோம். இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு மாடித்தோட்டத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளோம். இத்தோட்டத்தில் தினமும் கிடைக்கும் காய்கறி, கீரை வகைகள் பயன்படுத்துகிறோம் என்றார்.–