‘வீரபாண்டி திருவிழாவிற்கு பைபாசில் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்’
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில்இருந்தது போல் பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும்,” என கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், மாநிலச்செயலாளர் மனோகரன், மாவட்டச் செயலாளர் மெல்வின், கணேஷ் மிஸ்ரா மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: கோயில் திருவிழா மே 6 ல் துவங்கி 14 வரை நடக்க உள்ளது. எட்டுநாட்களும் மதுரையில் இருந்து கம்பம், குமுளி செல்லும் வாகனங்கள், அரண்மனைப்புதுார், வயல்பட்டி வழியாக, வீரபாண்டி பைபாஸ் ரோட்டை அடைந்து செல்லும். அதுபோல் குமுளியில் இருந்து வரும் வாகனங்கள் தப்புக்குண்டு பிரிவு நாகலாபுரம் வழியாக அரண்மனைப்புதுார் வழியாக தேனியை அடைந்து, பிற ஊர்களுக்கும் செல்லும்.
இந்த போக்குவரத்து மாற்றத்தால் பக்தர்கள், பல கி.மீ., துாரம் பஸ்சில் வந்து சிரமம் ஏற்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன்வீரபாண்டி பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் செல்ல எங்கள் கோரிக்கையின் படி அனுமதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்திற்கும், பக்தர்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை.எனவே, இம்முறையும் பைபாஸ் ரோட்டில் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என கோரினர்.