துார்வாரப்படாத வேலப்பன்குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்வதில் சிரமம்
தேவாரம் அருகே எரணம்பட்டியில் உள்ள வேலப்பன்குளம் ஓடை துார்வாராததால் செடிகள் வளர்ந்து பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேங்கி, மழை நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எரணம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள வேலப்பன் குளம் ஓடை துார்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
இப்பகுதியில் செடிகள் வளர்ந்து, பிளாஸ்டிக் குப்பை கழிவுகளாக தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழை காலங்களில் மழைநீர் சீராக செல்லவும், எரணம் குளம் கண்மாயில் மழை நீரை முழுவதும் தேக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேவாரம் மலை அடிவாரப் பகுதியில் இருந்து வேலப்பன்குளம் நீர்வரத்து ஓடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடையை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.