கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கோலாகலம் கோவிந்தா.. கோவிந்தா..கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்
மாவட்டத்தில் பெரியகுளம், போடி, உத்தமபாளையம் என பல்வேறு பகுதிகளில் நேற்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. விழா நடந்த இடங்களில் கோவிந்தா, கோவிந்தா நாமம் பக்தர்களை பரவசப்படுத்தியது.
சித்திரை திருவிழாவில் பவுர்ணமி அன்று கள்ளழகர் குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆறு உள்ள ஊர்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேனி உப்பார்பட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கள்ளழகர் வேடத்தில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். முல்லைப்பெரியாற்றங்கரையில் உள்ள மண்டபத்திற்கு வந்தார்.
அங்கு பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். பின் கரையில் நொச்சி இலையால் மேயப்பட்டிருந்த மண்டத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பெரியகுளம்:- சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரதராஜப்பெருமாள் கோயிலிலிருந்து உற்ஸவர் வரதராஜப் பெருமாள் கள்ளழகராக குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி புறப்பட்டார். அதிகாலை 5:30 மணி முதல் வராகநதி கரையோரம் வடகரை பகுதியில் 21 திருக்கண் மண்டகப்படி அபிஷேகமும், தென்கரையில் 16 திருக்கண் அபிஷேகம் மண்டகப்படிக்கும் சென்றார்.
பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் ‘கோவிந்தா கோவிந்தா’ நாமம் ஒலிக்க ‘வெண் கொடையில்’ சென்றார்.
கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் நடந்த திருக்கண் அபிஷேகத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி உலா வந்தது. அனைவருக்கும் அனைத்து விதமான நன்மைகள் உண்டாகும் என அர்ச்சகர்கள் குழுவினர் தெரிவித்தனர்.
உத்தமபாளையம்: யோகநரசிங்கபெருமாள் கோயிலில் நேற்று காலை பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெருமாள் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் வெண் பட்டு உடுத்தி முல்லைப் பெரியாறு நோக்கி கிளம்பினார்.
காலை 7:15 மணிக்கு கோயிலில் இருந்து கிளம்பி வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதி வழியாக முல்லைப் பெரியாற்றுக்கு சென்றார். 20 க்கு மேற்பட்ட மண்டகப்படியில் பெருமாள் எழுந்தருனினார். 9:00மணிக்கு ஞானம்மன் கோயில் படித்துறையில் முல்லைப்பெரியாற்றில் இறங்கினார்.
முன்னதாக காளாத்தீஸ்வரர் கோயில் சார்பாக பெருமாளுக்கு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். நாயுடு மகாஜன சங்கம் நேற்று உபயதாரராக இருந்தது. ஏற்பாடுகளை ஓம் நமோ நாராயணா பக்த சபை நிர்வாகிகள் செய்திருந்தனர், பக்த சபை சார்பாக பொங்கல், புளியோதரை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பட்டாச்சாரியார் ரெங்கராஜன் அபிஷேக ஆராதனைகளை மேற்கொண்டார்.
போடி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சீனிவாசப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வெண்பட்டு உடுத்தி கள்ளழகர் வேடத்தில் கொட்டகுடி ஆற்றில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா …கோபாலா… எனகோஷம் முழங்க கொட்டகுடி ஆற்றில் காலை 6:00 மணி அளவில் எழுந்தருளினார். அதன் பின் புதூர், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கிழக்குத் தெரு உள்ளிட்ட தெருக்களில் சுவாமி நகர் வலம் புரிந்து கோயில் வந்தடைந்தார்.
நாயுடு, நாயக்கர் மத்திய சங்க கவுரவ தலைவர் குமரன் தலைமையில் நடந்தது. ஜமீன்தார் வடமலை ராஜைய பாண்டியன் முன்னிலை வகித்தார். சீனிவாசப் பெருமாள் அன்னதான அறக்கட்டளை தலைவர் பாண்டி, செயலாளர்கள் பிச்சைமணி, ராஜா, நாயுடு நாயக்கர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
ஏராளமான பக்தர்கள் கோவிந்தா … கோவிந்தா … என்ற கோஷம் முழங்க கள்ளழகர் வேடத்தில் இருந்த சீனிவாசப் பெருமாளின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் நாராயணி செய்திருந்தார். பிரசாதம் வழங்கப்பட்டன.
தீர்த்த தொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்க்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்திரபுத்திரனாரின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.