ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி வத்தலக்குண்டு தாய் , மகன் மீது வழக்கு
தேனி:அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக கூறி ரூ.88 லட்சம் பெற்று மோசடி செய்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சூரஜ், தாய் சுமதி மீது தேனி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தேனி ஓடைப்பட்டி அருகே மூர்த்திநாயக்கன்பட்டி ராமர்கோயில் தெரு சீரஞ்சீவி. இவரது தங்கை பவித்ரா. இவர் எம்.எஸ்சி., எம்.எட்., படித்து அரசு வேலைக்கு முயற்சி செய்தார். பவித்ராவின் கணவர் ஜெகதீசனிடம் திண்டுக்கல் மாவட்டம் ,வத்தலக்குண்டு வடக்கு காந்திநகரை சேர்ந்த சூரஜ் நண்பராக அறிமுகமானார். பின், ஜெகதீசனிடம், ‘தனக்கு பல அரசியல்வாதிகள் தெரியும், பலருக்கு அரசுப்பணி வாங்கிக் கொடுத்துள்ளேன், ‘என தெரிவித்துள்ளார்.
ஜெகதீசன் தனது மனைவியின் சகோதரர் சீரஞ்சீவியை தொடர்பு கொள்ள கூறினார். சீரஞ்சீவியை தொடர்பு கொண்ட சூரஜ், ‛வத்தலக்குண்டு அரசுப் பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அப்பணியை பெற்றுத்தர ரூ.50 லட்சம் தருமாறும் கேட்டார். ரூ.43.87 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலம் சிரஞ்சீவி அனுப்பினார். பின், பவித்ராவின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வேலைக்கான பணி ஆணையை சூரஜ் அனுப்பி வைத்தார்.
கோவை அரசு பள்ளிக்கு பணி ஆணை கிடைத்துள்ளதாகவும், அதனை வத்தலக்குண்டுக்கு மாற்ற மேலும் ரூ.35 லட்சம் தேவை எனவும் சூரஜ் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ரூ.44.14 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆக மொத்தம் ரூ.88 லட்சம் பெற்ற, சூரஜ், அவரது தாய் சுமதி ஆகியோர் இணைந்து பவித்ராவிற்கு வேலை வாங்கித்தராமல் போலி பணி ஆணை வழஙகி மோசடி செய்தனர்.
தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் சிரஞ்சீவி அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர் சூரஜ், அவரது தாய் சுமதி மீது மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.