பருவ மழை குறைந்ததால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
மூணாறில் மழை குறைந்த பிறகு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்தது.
மூணாறில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன. அவை தென் மேற்கு பருவ மழைக்கு முன்பு பல எஸ்டேட் பகுதிகளில் வலம் வந்தன. பருவ மழை துவங்கியதும் யானைகளின் நடமாட்டம் குறைந்தது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக பருவ மழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்தது. அப்போது யானைகளின் நடமாட்டத்தை காண முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவ மழை குறைந்து வெயில் முகம் தென்பட்டதால் யானைகள் நடமாடி வருகின்றன.
பழைய மூணாறில் ஒர்க் ஷாப் கிளப் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஜூலை 18 முதல் இரண்டு யானைகள் நடமாடின. அவை ஜூலை 20ல் பகலில் நகரில் போலீஸ் ஸ்டேஷன் அருகே வெகு நேரம் முகாமிட்டன. தவிர பிரபல படையப்பா ஆண் காட்டு யானை மாட்டு பட்டி, அருவிக்காடு உள்பட பல பகுதிகளில் நடமாடி வருகிறது.
இந்நிலையில் மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் குருமலை டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 13 ன் அருகில் உள்ள காட்டில் ஒரு குட்டி உள்பட மூன்று யானைகள் நேற்று முகாமிட்டன. கடந்த இரண்டு வாரங்களாக மழையை பார்த்து அஞ்சிய தொழிலாளர்கள், தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்ததால் அச்சமடைந்தனர்.