உழவர் சந்தையில் பச்சை மிளகாய் கிலோ ரூ.120க்கு விற்பனை: 5 மாதங்களாக விலை குறையவில்லை
கம்பம் உழவர் சந்தையில் பச்சை மிளகாய் கிலோ ரூ.120க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்திற்கு விலை குறைய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
கம்பம் உழவர் சந்தையில் நாள் ஒன்றுக்கு 30 முதல் 35 டன் காய்கறிகள் விற்பனையாகிறது. கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள், தினசரி கம்பம் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் தமிழக அளவில் காய்கறி விற்பனையில் கம்பம் உழவர் சந்தை முதல் 10 இடங்களில் உள்ளது.
நேற்றைய விலை நிலவரப்படி பச்சை மிளகாய் உழவர் சந்தைக்குள் கிலோ ரூபாய் 120க்கும், வெளிமார்க்கெட்டில் ரூபாய் 150க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிக வெயில் காரணமாக பச்சை மிளகாய் விளைச்சல் குறைந்தது. வெயிலை தொடர்ந்து தொடர் மழையால் பச்சை மிளகாய் வரத்து இல்லாமல் போனது. மேலும் ஆகஸ்ட் மாதம்தான் பச்சை மிளகாய் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பச்சை மிளகாய் விலை குறைய வாய்ப்பில்லை என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஐந்து மாதங்களாக பச்சை மிளகாயின் விலை கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாகி வருகிறது.