18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பிற்குமுன் கரைகள் சீரமைக்கப்படுமா: உடைப்பு ஏற்படுவதால் விவசாயிகள் வலியுறுத்தல்
18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பிற்குமுன் சேதமடைந்த கரைப்பகுதிகளை நீர்வளத்துறையினர் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் திட்டம் 47 கி.மீ., தூரம் கொண்டதாகும்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள மானாவாரி விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 44 கண்மாய்களில் தண்ணீர் நிரப்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், 4614 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெறவும் இக்கால்வாய் பயன்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைமதகு பகுதியில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். கடந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு போதிய அளவு இருந்தும் 3 மாதங்கள் தாமதமாக டிசம்பரில் திறக்கப்பட்டது.
திறந்த ஒரு வாரத்தில் முதல் மடை அருகே கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டது. அதை சீரமைத்து இரண்டு வாரத்திற்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது. திறந்த ஒரு சில நாட்களில் தொட்டிப் பாலம் அருகே கரைப்பகுதியில் இரண்டாவது உடைப்பு ஏற்பட்டது. இதற்காக மீண்டும் தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைத்தபின் திறந்து விடப்பட்டது.
இதனால் 44 கண்மாய்கள் முழுமையாக நிரம்பாமலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமலும் இருந்ததால் விவசாயிகள் புலம்பினர்.
தற்போது அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் வரும் செப்டம்பரில் தண்ணீர் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பல இடங்களில் சேதமடைந்துள்ள கால்வாயின் கரைப்பகுதிகளை முன்கூட்டியே சீரமைக்க நீர்வளத் துறையினர் முன் வர வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.