மாணவர்கள் டிரைவிங் லைசென்ஸ் இன்றி டூவீலர் ஓட்டுவது குற்றம்
‛சிறார்கள், மாணவர்கள் ‛ டிரைவிங் லைசன்ஸ்’இன்றி டூவீலர்களை ஓட்டுவது குற்றம்’ என, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் எஸ்.பி., அலுவலக சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவின் டி.எஸ்.பி., சக்திவேல், பேசினார்.
நிகழ்விற்கு டி.எஸ்.பி., தலைமை வகித்து பேசியதாவது: பள்ளியில் ஜாதி, இன, நிறம் பாகுபாடு இன்றி மாணவர்கள் நண்பர்களாக பழக வேண்டும். அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளித்த அறிக்கையின் படி கைகளில் கயிறு கட்டக்கூடாது. எச்சூழ்நிலையிலும் சக மாணவர்களை புறக்கணிக்கக்கூடாது. சிறார் திருமணம் தண்டனைக்குரிய குற்றம். அதனால் மாணவர்கள் 21 வயதிற்கு பின்தான் திருமணம் செய்திட வேண்டும். இதுகுறித்து மாணவர்கள் பெற்றோர், உறவினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.’, என்றார். எஸ்.ஐ., ராஜா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு எஸ்.ஐ.,க்கள் வேல்முருகன், ரகு, புள்ளியியல் ஆய்வாளர் ஆனந்த வடிவேல், துறையின் பெண் ஏட்டுக்கள், பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.