25 ஆண்டுகள் பணிபுரிந்தும் பதவி உயர்வு இல்லை: புலம்பும் சிறைத்துறை ஏட்டுகள்
’25 ஆண்டுகள் பணிபுரிந்த பின்பும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. போலீஸ், தீயணைப்பு போன்று எங்களுக்கும் சிறப்பு உதவி சிறை அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும்,’ என, சிறைத்துறை ஏட்டுகள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 9 மத்திய, 13 மாவட்ட, 3 மகளிர் தனி, 87 கிளைச்சிறைகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரம் இரண்டாம் நிலை போலீசார் முதல் ஏட்டு வரை பணிபுரிகின்றனர். ஏட்டுகள் மட்டும் 300 பேர் உள்ளனர். பத்து ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மூன்று துறைகளிலும் ஏட்டு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு போலீஸ் துறையில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வும், தீயணைப்புத் துறையில் சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. சிறைகளில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஏட்டுகள் பதவி உயர்வு இன்றி அதே நிலையிலேயே பணிபுரிவது தொடர்கிறது.
தமிழ்நாடு சீரூடை பணியாளர் தேர்வாணையம் மூலமே இந்த மூன்று துறைகளுக்கும் தேர்வு நடக்கிறது. ஒரே மாதிரியான கல்வித் தகுதி, அடிப்படைப்பயிற்சி, ஊதியம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் பதவி உயர்வு வழங்குவதில் மட்டும் சிறைத்துறை பின்தங்கி உள்ளது. பதவி உயர்வு கொடுக்க தயக்கம் காட்டப்படுகிறது.
2024 ல் சட்டசபை மானிய கோரிக்கையில் அமைச்சர் ரகுபதி பதவி உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிடவில்லை. தமிழக சிறைகளில் காலியான 242 உதவி சிறை அலுவலர் பணியிடங்களில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களை பதவி உயர்வு மூலம் நியமிக்க வேண்டும் என சிறைத்துறை ஏட்டுகள் தெரிவித்தனர்.