காமக்காபட்டியில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம்
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகேயுள்ள காமக்காபட்டியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி காமக்கப்பட்டி ரோடு பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் பகுதியில் ராஜா என்பவரது தென்னந்தோப்பு உள்ளது. இதில் மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார். தோட்டத்தில் இயற்கை உரமேற்ற 200 செம்மறிகளுடன் கிடை அமைத்தார். மார்ச் 5ல் ஆட்டுக்கிடையில் புகுந்த சிறுத்தை 6 ஆடுகளை கடித்து கொன்றது. இதில் 4 ஆடுகளை சிறுத்தை புதருக்குள் இழுத்துச் சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம்: காமக்காபட்டியைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து, கரட்டுப்பகுதி அருகே தென்னந்தோப்பில் தண்ணீர் பாய்ச்சும் போது, சிறுத்தையை பார்த்துள்ளார். இதனால் காமக்காபட்டி, அட்டணம்பட்டி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கூண்டு வைத்து பிடிப்பது வழக்கம். பொதுமக்களின் அச்சத்தை போக்க சிறுத்தை விரைந்து பிடிப்பதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.