ஓணத்திற்காக அறுவடைக்கு தயாரான காய்கறிகள்
கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்குவதால் வட்டவடையில் காய்கறிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
மூணாறு அருகில் உள்ள வட்டவடை ஊராட்சியில் மக்களின் முக்கிய தொழில் காய்கறி சாகுபடியாகும். அங்கு பல்வேறு காய்கறிகள் ஆண்டிற்கு சராசரியாக 27 ஆயிரத்து 480 டன் உற்பத்தி நடக்கிறது. குறிப்பாக ஓணம் பண்டிகையையொட்டி அதிக சாகுபடி நடக்கும். செப்.15ல் ஓணம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது காரட், முட்டைக்கோஸ், உருளைகிழங்கு, பீன்ஸ் வகைகள், பூண்டு உட்பட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அவை அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
அங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் விவசாயிகளிடம் இருந்து தோட்டகலைத்துறை சார்பில் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். கடந்தாண்டு கொள் முதல் செய்த காய்கறிகளுக்கு பணம் வழங்காமல் லட்சக் கணக்கில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்தாண்டு தோட்டக்கலைத்துறையினர் அவற்றை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.