‘ஆன்லைன் மீட்டிங்’கை கண்டித்து அலைபேசி அழைப்புகள் தவிர்ப்பு; ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் முடிவு
‘ஆன்லைன் மீட்டிங்’ எனக்கூறி இரவு 9:30 மணி வரை பணியாளர்கள் அலைக்கழிப்பு செய்யப்படுவதை கண்டித்து செப்., 9 முதல் 20 வரை பணிநேரம் முன்பும், பின்பும் உயர் அதிகாரிகளின் அலைபேசி அழைப்புகளை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தேனியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க பொது செயலாளர் பாரி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அற்ப காரணங்களுக்காக ராஜபாளையம் பி.டி.ஓ., சத்தியசங்கரை ‘சஸ்பென்ட்’ செய்துள்ளது. அவரது சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி செப்., 20 ல் சென்னையில் ஒரு நாள் தர்ணா போராட்டம் நடக்கவுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் தர்மபுரி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போன்ற பெரிய மாவட்டங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 35 முதல் 40 ஊராட்சிகளுக்கு மேல் நிர்வகிக்கும் நிலையுள்ளது. காலையில் பணிக்கு வரும் ஊழியர்கள் இரவு 9:30 மணி வரை ஆன்லைன் மீட்டிங் என அலைக்கழிக்கப்படுகின்றனர். வார நாட்களில் கூட விடுமுறை இன்றி உழைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதை கண்டித்து மாநில குழு முடிவின்படி செப்., 9 முதல் செப்., 20 வரை 11 நாட்களுக்கு காலை 10:00 மணிக்கு முன்பும், மாலை 5:45 மணிக்கு பின்பும் உயர் அதிகாரிகளின்அலைபேசி அழைப்புகளை எடுப்பது இல்லை. அரசின் விதிப்படி பணி நேரத்தில் மட்டும் பணிபுரிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துறை செயலாளர், இயக்குனருக்கு தபால் மூலம் தெரிவித்துள்ளோம் என்றார்.