ரூ.1.50 கோடியில் எரியூட்டும் மயானம் தயார் : உத்தமபாளையத்தில் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு
உத்தமபாளையம்: – உத்தமபாளையத்தில் ரூ.1.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட எரியூட்டும் மயானம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். விரிவாக்கப் பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நகருக்கு கிழக்கு திசையில் முல்லைப் பெரியாற்றுக் கரையில் பொது மயானம் உள்ளது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால், மயானத்தை விரிவாக்க பேரூராட்சி முடிவு செய்தது.
அதன்படி பொது மயான வளாகத்தில் ரூ.1.50 கோடியில் எரியூட்டும் மயானம் கட்டப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகளில் மட்டுமே இந்த எரியூட்டு மயானத்திற்கு அனுமதி கிடைத்தது.
உத்தமபாளையம் பொது மயானத்தில் மூன்று சிலிண்டர்களுடன் அமைக்கப்பட்ட எரியூட்டும் மயானம், தற்போது 6 சிலிண்டர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஒராண்டிற்கும் மேல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பல தரப்பிலிருந்து எழுந்த கோரிக்கையை தொடர்ந்து தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது பொது மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. சோதனை ஒட்டத்திற்கு முயற்சி செய்து வருகிறோம். தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்த அரசு கூறியுள்ளது.’, என்றனர்