எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆய்வு
கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக விரைவில் ரோடு அமைக்க நடவடிக்கை: ஆய்வு செய்த எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் உறுதி
‘மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப் பகுதி வழியாக விரைவில் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.’ என, பளியன்குடியில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் உறுதியளித்தார்.
தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் நேற்று காலையில் சைக்கிள் பயிற்சியின் போது லோயர்கேம்ப் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பளியன்குடி சென்றார். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டரிந்தார். சேதமடைந்த வீடுகளால் சிரமத்திற்கு உள்ளாவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.
தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
பளியன்குடி வரை சைக்கிளில் வந்து பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் குறித்து விசாரித்தேன். இவர்கள் குடியிருக்கும் வீடுகள் அனைத்தும் மிக மோசமாக உள்ளன. ரோடு, தெருவிளக்கு வசதி இல்லை.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் மூலம் வீடுகள், தெருவிளக்கு, குடிநீர், ரோடு வசதி அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும். தமிழக அரசின் காலை உணவு திட்டம் பழங்குடியின மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
அதேபோல் பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தார் ரோடு அமைப்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதை மாநில அரசு மூலமாக மத்திய அரசிடம் அனுமதி வாங்கி ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.’, என்றார்.