நிலம் கிரையம் செய்து தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: ஒருவர் கைது
தேனியில் நீதிமன்ற தீர்ப்பினை மறைத்து, நிலத்தை கிரையம் செய்து தருவதாகக் கூறி ஏமாற்றிய பெரியகுளம் லட்சுமிபுரம் ரவீந்திரனை 52, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தேனி பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய பாரதி தெரு ஜவுளிக்கடை உரிமையாளர் முருகதாஸ். இவர், இவரது நண்பர்கள் தங்கராஜ், திருவரங்கப்பெருமாள் இணைந்து லட்சுமிபுரம் கமலாட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 26.5 சென்ட் நிலத்தை வாங்க முடிவு செய்தனர். சென்ட் ரூ.2 லட்சத்து நானுாறுக்கு பேசி ரூ.11 லட்சத்தை முன் பணமாக வழங்கினர். அதற்காக கிரைய ஒப்பந்தம் எழுதினர். அதில் ரவீந்திரன் சாட்சி கையொப்பம் இட்டார்.
நிலத்திற்கான மீதித்தொகை தருவதாக முருகதாஸ், அவரது நண்பர்கள் பெரியகுளம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் காத்திருந்தனர்.
பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு கமலாட்சி வரவில்லை.
சந்தேகமடைந்த முருகதாஸ், அவரது நண்பர்கள் நிலத்தை பற்றி விசாரித்தனர்.அதில், ‘பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் கெங்கம்மாள், சீனிவாசன், ஜெயராம், லட்சுமியம்மாள் தரப்பிற்கும், ரவீந்திரன், ராஜாராம், சீனியம்மாள் தரப்பிற்கும் வழக்கு நடந்தது. குறிப்பிட்ட இடத்தில் ரவீந்திரன், சீனியம்மாள், ராஜாராம் ஆகியோர் எந்த வில்லங்கமும் செய்ய கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டதும், இந்த தீர்ப்பை மறைத்து கமலாட்சிக்கு நிலத்தை ரவீந்திரன் விற்பனை செய்ததும் தெரிந்தது.இந்த நிலத்தை முருகதாஸ் தரப்பிற்கு விற்பனை செய்ய, ரவீந்திரன் உதவியுடன் கமலாட்சி முயன்றார்.
கமலாட்சி, ரவீந்திரன் மீது தேனி எஸ்.பி.,யிடம் முருகதாஸ் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையிலான போலீசார் ரவீந்திரனை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள கமலாட்சியை தேடி வருகின்றனர்.