தேக்கடி வனப்பகுதியில் கத்திகள் மறைத்து வைத்திருந்த 2 பேர் கைது
கூடலுார்: தேக்கடி வனப்பகுதியில் பட்டா கத்திகளை மறைத்து வைத்திருந்த 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
பெரியாறு புலிகள் சரணாலய பகுதி தேக்கடியில் தமிழக நீர்வளத்துறை ஆய்வாளர் மாளிகை உள்ளது. இதற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இரண்டு பட்டா கத்திகள் மறைத்து வைத்திருந்ததை கேரள வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது வெல்டிங் வேலைக்காக வந்த பத்தனம்திட்டாவை சேர்ந்த விஜேஷ் விஜயன் 32, அரவிந்த் ரகு 22, என அடையாளம் காணப்பட்டு இருவரையும் கைது செய்தனர். பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரும் வேலை செய்ய வந்த இடத்தில் பட்டா கத்திகளை உருவாக்கி சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது தேக்கடி சோதனைச் சாவடியில் வனத்துறையினரைக் கண்டதும் வனப்பகுதிக்குள் மறைத்து வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. குமுளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.