Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

மொய் பணத்தை அறக்கட்டளைக்கு கொடுத்த புதுமண தம்பதி

தேனி ஆண்டிபட்டி சக்கம்பட்டி தனியார் மண்டபத்தில் திருமணம் முடித்த தம்பதிகள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற மொய் பணம் முழுவதையும், மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் புற்றுநோய் பிரிவின் வளர்ச்சிக்காக கொடுத்தனர்.

சக்கம்பட்டியில் ஜவுளி தொழில் செய்து வருபவர் மீனாட்சி சுந்தரம்- -லாவண்யா தம்பதி. இவர்களது மகன் ஹரிஹரன். பி.டெக்., முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

ஹரிஹரனுக்கும் சென்னையைச் சேர்ந்த ஏகாம்பரம்- -செல்வராணி தம்பதியின் மகள் தேன்மொழிக்கும் நேற்று முன்தினம் சக்கம்பட்டியில் திருமணம் நடந்தது.

திருமணத்தில் கிடைத்த மொய் பணத்தை மதுரையில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளை புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புற்றுநோய் பிரிவின் கட்டட நிதிக்கு வழங்கினர்.

இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பாலகுருசாமி கூறியது: எங்கள் அறக்கட்டளைக்கு சிறந்த நிறுவனத்திற்கான முதலமைச்சர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

ரோட்டோரங்களில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு டிரஸ்ட் மூலம் இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது.

தற்போது மதுரையில் எங்களின் 70 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனையில் 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆதரவற்ற நிலையில் உள்ள பலரும் அரசு, தொண்டு நிறுவனங்கள் மூலம் பரிந்துரைக்கப் படுகின்றனர்.

சக்கம்பட்டியை சேர்ந்த புதுமண தம்பதிகள் வழங்கிய மொய் பணம் ரூ. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 698 எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இதுபோன்ற உதவிகளால் நாங்கள் இன்னும் பலருக்கும் உதவிட கை கொடுக்கும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *