நெல் சாகுபடிக்கான தண்ணீர் இருப்பை உறுதி செய்யுங்கள்: நீர்வளத்துறை அதிகாரியிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல்சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினர்.
உத்தமபாளையம் நீர்வளத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன் தலைமையில் நடந்தது.
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க தலைவர் தர்வேஷ் முகைதீன், செயலாளர் சகுபர் அலி, கம்பம் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், நீரினை பயன்படுத்துவோர் நிர்வாகி ராமகிருஷ்ணன், சின்னமனூர் தலைவர் ராஜா, கூடலூர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வீரபாண்டி தலைவர் மாரிச்சாமி, சீலையம்பட்டி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியதும் நீர்வளத்துறை சார்பில் , அணையின் நீர் இருப்பு உயரும் பட்சத்தில் இரண்டாம் போகம் சாகுபடி குறித்து முடிவு செய்யலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு விவசாய சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவசாயிகள் பேசுகை யில் , கடந்தாண்டு இதே நாளில் பெரியாறு அணையில் 121 அடியும் வைகையில் 57 அடியும் நீர்மட்டம் இருந்தது. இந்தாண்டும் அதே நிலை தான் உள்ளது.
இரண்டாம் போகத்திற்கு 120 அடிக்கு குறையாமல் இருப்பு வைக்க வேண்டும். தற்போது எடுக்கும் தண்ணீரின் அளவை 250 அடியா குறைக்க வேண்டும். எனவே 120 அடிக்கு கீழ் தண்ணீர் எடுக்க கூடாது.
நாங்கள் ஏற்கெனவே இரண்டாம் போகத்திற்கு நாற்று வளர்க்கும் பணியை துவக்கி விட்டோம். எனவே இரண்டாம் போகத்திற்கு உரிய நீர் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனர்.