தேனி சார்பதிவாளர் மீது ஊழல் தடுப்பு வழக்கு
தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 43,900 க்கு முறையான விளக்கம் அளிக்காததால் சார்பதிவாளர் மாரீஸ்வரி, ஒப்பந்த கணினி பணியாளர் முத்து, ஜெயலட்சுமி, புகைப்பட கருவி ஆப்பரேட்டர் ஜிஜேத்ராஜா ஆகிய நால்வர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் ஆய்வுக்குழு இன்ஸ்பெக்டர் இப்ராஹிம்சேட் 54. தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் பெற்று பத்திரப்பதிவு நடப்பதாக இவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., சுந்தரராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா, ஆய்வுக்குழு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 6 பேர் தலைமையில் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை துவக்கினர்.
சார்பதிவாளர் மாரீஸ்வரி, ஒப்பந்தப் பணியாளர்கள் முத்து, ஜெயலட்சுமி, ஜிஜேத்ராஜா ஆகிய நால்வர் இருந்தனர். இதில் அலுவலக ஆவணங்கள் வைப்பறை பீரோவின் மேல் ரூ.11,400 ஆவணங்களுக்கு இடையில் இருந்தன. 2வது பீரோவிற்கு மேல் பிளாஸ்டிக் டிரேயில் ரூ.16,500 இருந்தது. மற்றொரு அறை பீரோ மீதுள்ள ஆவணங்களுக்கு இடையே ரூ.16,000 இருந்தன. இவ்வாறு கணக்கில் வராத மொத்தம் ரூ.43,900 ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இப்பணத்திற்கான ஆவணங்கள், விளக்கத்தையும் தேனி சார்பதிவாளர், பணியாளர்கள் அளிக்கவில்லை. இதனால் சார்பதிவாளர் உள்ளிட்ட நால்வர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.