Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பி.எட். , படித்தவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் வலியுறுத்தல்

கம்பம், : ‘பி.எட்., படித்தவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும்,’ என, தேனி மாவட்டம் சுருளியில் நடந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சுருளியில் சங்க மாநில முதல் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் முனியேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் பூர்ணச்சந்திரன், பொருளாளர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் திருக்குமரன் வரவேற்றார். பொருளாளர் பிரேம் குமார் துவங்கி வைத்தார்.

பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வரை நேரடி உதவியாளர் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். பி.எட்., பட்டம் பெற்று அமைச்சு பணியாளர்களாக உள்ளவர்களுக்கு 2 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 175 ஐ அமல்படுத்த வேண்டும். 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளியில் ஒரு உதவியாளர், இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் அல்லது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தை உதவியாளர் பணியிடமாக தகுதி உயர்வு செய்திட வேண்டும். மதிப்பூதியத்தையும் அதிகரிக்க வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனங்களை ஓராண்டிற்குள் நிரப்ப வேண்டும். -பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை பணி, கரூவூல ஒத்திசைவுப் பணிகளில் அமைச்சு பணியாளர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதை போன்று இணைய வசதியுடன் மடிக்கணினி வழங்க வேண்டும். கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *