‘ஜல் ஜீவன் ‘ திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ஆண்டிபட்டி: ஜல் ஜீவன் திட்டத்தில் ஆண்டிபட்டி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் 3 கிராமங்களில் விநியோகம் பாதித்துள்ளது.
ஜல் ஜீவன் திட்டம் மூலம் வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியங்கள், ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில கிராமங்களில் பணிகள் முடிந்து குடிநீர் விநியோகம் துவங்கியுள்ளது. இன்னும் பல கிராமங்களில் இதற்கான பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆண்டிபட்டி அருகே எஸ்.ரங்கநாதபுரம் விலக்கில் இருந்து கரிசல்பட்டி விலக்கு வரை 3 இடங்களில் குடிநீர் மெயின் குழாய் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த குழாய் பல வாரங்களாக சரி செய்யாததால் குடிநீர் வீணாகி அப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. குழாய் உடைந்ததால் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கரிசல்பட்டி, மலையாண்டிநாயக்கன்பட்டி, சண்முகசுந்தரபுரம் கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. உடனடியாக சரிசெய்து, பாதிப்படைந்த கிராமங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜல்ஜீவன் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.