ஓராண்டாக மாற்றம் இன்றி தொடரும் செங்கல் விலை உற்பத்தியாளர்கள் புலம்பல்
கம்பம் : ஒராண்டிற்கும் மேலாக விலையில் மாற்றம் இன்றி ஆயிரம் செங்கல் ரூ.5800 விலை தொடர்வதால் கட்டுபடியாவில்லை என உற்பத்தியாளர்கள் புலம்புகின்றனர்.
கம்பத்தில் நூறு செங்கல் காளவாசல்கள் செயல்பட்டன. இவை படிப்படியாக குறைந்து தற்போது 30 காளவாசல்கள் உள்ளன. செங்கல் விலை ஆயிரம் செங்கல் விலை ரூ.5800 ஆக உள்ளது. இந்த விலை ஓராண்டாக மாற்றம் இன்றி அதே நிலையில் உள்ளது. சமீபமாக செங்கல் உற்பத்தியில் இயந்திர பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் செங்கல், எடை கூடுதலாகவும், ஒரே சீராக இருப்பதால், பொதுமக்கள் மிஷின் செங்கல் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக காளவாசல் உரிமையாளர் கிருஷ்ணன் கூறுகையில், செங்கல் உற்பத்தி செய்ய களிமண், செம்மண், களிப்பு மண் தேவைப்படும். மானாவாரி நிலங்களில் கனிமவளத்துறையின் அனுமதி பெற்று எடுக்க வேண்டும். கடந்த ஒராண்டிற்கும் மேலாக போடி அருகில் இருந்து 4 யூனிட் மண் ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி செங்கல் உற்பத்தி நடைபெறுகிறது .
விலையில் மாற்றம் இல்லாத நிலை உள்ளது. மிஷின் செங்கலுக்கு மவுசு இருப்பதால் பலர் இயந்திர உற்பத்திக்கு மாறி வருகின்றனர். எப்படி இருந்தாலும் விலை அதிகரித்தால் தான் காளவாசல் நடத்த முடியும் என்றார்.