வனத்துறையினர் கண்காணிக்க வலியுறுத்தல் : தேனி நகரில் காலியிடத்தில் குப்பையில் சிதறிக் கிடந்த மயில் இறகுகள்
தேனி, டிச. 11: தேனி நகரில், குப்பைகள் நடுவே மயில் இறகுகள் சிதறிக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி நகர், புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து பெரியகுளம் செல்லக்கூடிய பைபாஸ் சாலையில் இருபுறமும் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. இக்காடுகளில் சமீபகாலமாக அதிக அளவில் மயில் நடமாட்டம் உள்ளது. சில நேரங்களில் அவை சாலையோரம் வரும் போது பயணிகளின் கண்களைக் கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில், புது பஸ் நிலையத்திலிருந்து தேனி நகருக்கு செல்லக்கூடிய சிவாஜி நகர் மெயின் சாலையில், ஒரு காலி வீட்டு மனையிடத்தில் குப்பைகளின் நடுவே மயில் இறகுகள் சிதறிக் கிடந்தன. இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மயில் எண்ணெய் போன்ற மருந்து தயாரிப்புக்காக மயில்கள் வேட்டையாடப்பட்டு வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், மயிலை வேட்டையாடி அதன் இறகுகளை மர்ம நபர்கள் இப்பகுதியில் உள்ள காலியிடத்தில் எறிந்து விட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனத் தெரியவில்லை என்றும், வனத்துறையினர் மற்றும் போலீசார் இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.