நீரினை பயன்படுத்துவோர் சங்கம் வலியுறுத்தல் : கைக்கிளான் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றி, துார்வார வேண்டும்
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைக்கிளான் கண்மாய் மதகு சேதமடைந்து நீர் வீணாக வெளியேறுவதால் வேளாண் சாகுபடி பணிகளுக்கு போதிய தண்ணீர் இன்றி விவசாயிகள் சிரமப்படுவது தொடர்கிறது.
பெரியகுளம் கும்பக்கரை பிரிவு சச்சுமடை செல்லும் பகுதியில் மஞ்சளாறு வடிநில கோட்ட நீர்வளத்துறைக்கு சொந்தமானது கைக்கிளான் கண்மாய். இக்கண்மாய்க்கு முருகமலை அடிவாரம் பெரியவாலாட்டி, சின்னவாலாட்டி, ஈச்சமலை, பூசணிமலை, அமராவதி கோயில் பகுதியில் இருந்து வரும் மழைநீர் செலும்பாற்றில் கலந்து, கைக்கிளான் கண்மாய்க்கு நீர் வரத்து உள்ளது. 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் நீரை நம்பி 400 ஏக்கர் நேரடியாகவும், 200 ஏக்கருக்கும் அதிகமாக மறைமுகமாக பாசன வசதியும், நுாற்றுக்கணக்கான கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.
நெல், கரும்பு, வாழை உட்பட பல்வேறு விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக கண்மாய் நீர் இருந்து வருகிறது. நுாற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான இக் கண்மாயில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து தென்னை, மா, இலவம் மரங்களை வளர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் உள் குத்தகைக்கு விட்டு லாபம் பெறுகின்றனர். இதனால் விவசாயிகள் செய்வதறியாது மனக்குமுறலில் உள்ளனர்.
ஆக்கிரமிப்பு மரங்கள் அகற்றம் அவசியம்
பிச்சை, தலைவர், நீரினை பயன்படுத்து வோர் சங்கம்,கைக்கிளான் கண்மாய், பெரியகுளம்: இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்தும் கண்மாய் பராமரிப்பு இல்லாததால் நீர் தேங்குவது இல்லை. தேங்கும் சிறிதளவு நீரும் மறுகால் நீர், செல்லும் மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கண்மாயில் தேங்காமல் வெளியேறுகிறது. விவசாயத்திற்கு பயன்படும் நீர் வீணாகிறது. கண்ணுக்கு எட்டிய துாரம் கண்மாயில் ஊனான் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் நீர் தேக்கப்பகுதியில் நீர் தேங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. கரைப் பகுதியில் இலவம், மா, தென்னை மரங்கள் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளன. நீர்வளத்துறை ஆக்கிரமிப்பு மரங்களை அகற்றாமல், மரத்திற்கு நம்பர் போட்டு வசூல் செய்து வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பலமுறை மனு கொடுத்தும் பதில் இல்லை. கலெக்டர் நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் கரையோரம் பகுதிகளில் மாடு, ஆடு, கோழி கொட்டகை அமைத்த நபர்கள் கழிவுகளை கண்மாயில் கொட்டுகின்றனர். இதனால் நீர் நிலைகள் மாசுபடுகிறது., என்றார்.
அத்துமால் அளக்க வேண்டும்
ரவி, கீழப்புரவு மா விவசாயிகள் சங்க உறுப்பினர்:கண்மாயில் பாதி அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது. நீர்த்தேங்கும் எஞ்சிய பகுதியில் களைச் செடிகள், முட்செடிகள் வளர்ந்து இடையூறாக உள்ளன. கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுப் பணித்துறையினர் அத்துமால் அளந்து கற்கள் ஊன்ற வேண்டும். பழுதான இரு மடைகளை சீரமைக்க வேண்டும். பெரியகுளத்தில் பாரம்பரியமான கைக்கிளான் கண்மாய் ஆண்டுதோறும் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கியுள்ளது.’, என்றார்.