விவசாயிகள் , பொதுமக்கள் பயன்பெற அழைப்பு : முருங்கை, வாழை கறிவேப்பிலை, பப்பாளி கன்றுகள் ரூ.15க்கு
கம்பம்: ‘வாழை, பப்பாளி, கறிவேப்பிலை, முருங்கை கன்றுகள் ரூ.15க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், விரும்பும் விவசாயிகள், பொது மக்கள் தோட்டக்கலைத் துறை வட்டார அலுவலகங்களுக்கு நேரிடையாக சென்று பெற்று, நடவு செய்து பயன் பெறலாம்.’ என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கம்பம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பாண்டியன் ராணா கூறியதாவது: கடந்தாண்டு மூலிகைச் செடிகள் வழங்கினோம். இந்தாண்டு தமிழக அரசின் ‘மண்ணுயிர் காத்து இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் முருங்கை, வாழை, கறிவேப்பிலை, பப்பாளி கன்றுகள் வழங்குகிறோம். இதன் முழு விலை ரூ.60 ஆகும். மானியம் ரூ.45 போக ரூ.15 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.’, என்றார். கம்பம் வட்டாரத்திற்கு 2100 கிட்டுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. தேவைப்படும் விவசாயிகள், பொது மக்கள் கம்பம் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உத்தமபாளையம், சின்னமனுார் வட்டாரங்களிலும் அந்தந்த தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் கிடைக்க மாவட்ட தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.