ஆபத்தான குளியலில் சிறுவர்கள் பெற்றோர் கண்காணிப்பு அவசியம்
கூடலுார் : 18ம் கால்வாயில் ஆபத்தான முறையில் ஆனந்த குளியல் போடும் சிறுவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இக் கால்வாயில் ஆனந்த குளியல் போட சிறுவர்கள் குவிந்து வருகின்றனர்.
கூடலுார், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிறுவர்கள் தம்மனம்பட்டி தொட்டி பாலம், கூடலுார் மந்தை வாய்க்கால் பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரை அதிகம் வருகின்றனர். பல இடங்களில் ஆழம் மற்றும் பாறைகள் இருப்பது தெரியாமல் ‘டைவ்’ அடித்து ஆனந்த குளியல் போடுகின்றனர்.
சிறுவர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சில நேரங்களில் ஆபத்தை விளைவிக்கும். அதனால் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.