டில்லியில் லாரிகள் கட்டுப்பாட்டால் வியாபாரம் பாதிப்பு : மந்தநிலை தேங்காய் விலை உயர்ந்தும் விற்பனையில் தொடரும் n
ஆண்டிபட்டி: கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை உயர்ந்தாலும் டில்லியில் லாரிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாட்டால் விற்பனை பாதிப்பால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம், வருஷநாடு, சின்னமனூர், உத்தமபாளையம், பெரியகுளம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம் உள்ளது. இங்கு விளையும் தேங்காய் தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதங்களில் குறைவான வரத்தால் தேங்காய் விலை உயர்ந்தது. கிலோ ரூ. 20 முதல் 30 வரை இருந்த தேங்காய் விலை கிலோ ரூ.55 வரை உயர்ந்தது. சில்லறை விலையில் ஒரு தேங்காய் ரூ.10 லிருந்து ரூ.20 வரை உயர்ந்ததால் வீடுகளில் தேங்காய் பயன்பாட்டை பலரும் குறைத்தனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் அக்., நவ.,டிச., மாதங்களில் தேங்காய் வரத்து குறைந்து விடும். இடுபொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. தோப்பில் கிலோ ரூ.22 க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்போது ரூ.18 ஆக குறைத்துள்ளனர். கடந்த ஆண்டு தேங்காய் விலையில் சரிவு ஏற்பட்டபோது விவசாயிகள் இளநீர் காய்களை வெட்டி அதிக விலைக்கு விற்பனை செய்தனர். இதனால் தேங்காய் வரத்து தற்போது குறைந்து விலை உயர்ந்துள்ளது.
பல நுாறு டன் தேங்காய் தேக்கம்
தேங்காய் வியாபாரி ஆண்டிபட்டி சரவணன் கூறியதாவது: மாவட்டத்தில் இருந்து தினமும் 4000 டன் வரை தேங்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில் தேங்காய் விளைச்சல் அதிகம். சில மாதங்களில் வரத்து குறைவால் விலை உயர்ந்தது. ஹரியானா, பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பண்டிகைக்கான சீசன் முடிந்துள்ளது. டில்லியில் நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்பால் டீசல் லாரிகளில் பொருட்கள் கொண்டு செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். இதனால் பல நூறு டன் தேங்காய்களை குறிப்பிட்ட காலத்தில் விற்பனை செய்ய முடியவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் விற்பனை விலை கிலோ ரூ.55 ல் இருந்து ரூ.48 ஆக குறைந்துள்ளது. மார்க்கெட்டில் நிலையற்ற விலை, விற்பனை மந்தம் ஆகியவை விவசாயிகள், வியாபாரிகளை கவலை அடையச் செய்கிறது. ஜன.,பிப்., பின் வெயில் துவங்கியதும் விளைச்சல் அதிகமாகும். அப்போது தேங்காய் விலை மீண்டும் குறை வாய்ப்புள்ளது. தற்போது விலை உயர்ந்தாலும், வியாபாரத்தில் ஏற்படும் மந்த நிலை விவசாயிகள், வியாபாரிகளை கவலை அடைய செய்கிறது.