வாகன ஓட்டிகளை விபத்து அபாயத்தால் அவதி நெருக்கடிக்கு ஆளாக்கும் நெடுஞ்சாலைத்துறை
தேனி : தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேனியில் மேம்பால பணி நடந்து வரும் பகுதியில் சர்வீஸ் ரோட்டின் அகலத்தை சுருக்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாவது தொடர்கிறது.
தேனி மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பென்னிகுவிக் நகர் திட்டசாலை இணைப்பு பகுதியில் இருந்து சிப்காட் அருகே உள்ள தனியார் பள்ளி வரை மேம்பாலம் அமைகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் ரயில்வே கேட் அரண்மனைப்புதுார் விலக்கு பென்னிகுவிக் நகர் திட்டசாலை சந்திப்பு வரை போக்குவரத்து அதிகம் காணப்படும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டினை வாகனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன. அந்த பகுதியில் தற்போது ஒரு புறம் வடிகால் அமைக்கும் பணியும், மறு புறம் மேம்பாலத்தின் துவக்கப் பகுதி அமைக்க குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் ரோட்டின் அகலம் குறுகி உள்ளது.
எதிர் எதிரே வாகனங்களை இயக்குவதற்கு டிரைவர்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். பள்ளங்கள் உள்ள பகுதியில் இரவில் போதிய அளவில் வெளிச்சமும் இல்லை. இதனால் இரவில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. மேம்பாலத்தின் மற்றொரு புறம் சர்வீஸ் ரோட்டினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பின், மேம்பால துவக்க பகுதியில் பள்ளம் தோண்டும் பணிகளை தீவிரப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல இடங்களில் சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தேசியநெடுஞ்சாலைத்துறையினர் சில இடங்களை மட்டும் சீரமைத்துள்ளனர். பள்ளமாக உள்ள அனைத்து பகுதிகளையும் சீரமைக்க வேண்டும்.