தேனியில் ‛ நகரில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல் : பார்க்கிங்’ இட வசதி இன்றி தொடரும் போக்குவரத்து நெரிசல்
தேனி: தேனியில் முறையான வாகன ‛பார்க்கிங்’வசதி இல்லாததால் கார், கனரக வாகனங்கள் விதிமீறி ரோட்டில் நிறுத்துவது தொடர்கிறது. இப் பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தேனி நகர் பகுதியில் பெரியகுளம் ரோடு வழியாகவும், கம்பம், மதுரை ரோடு வழியாக அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. தேனி மதுரை ரோட்டில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் கம்பம் ரோடு வழியாக சின்னமனுார், கம்பத்திற்கு நாள்தோறும் ஏராளமான கார், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. சபரிமலை செல்லும் வாகனங்கள் தற்போது அதிகளவில் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் தேனிக்குள் வரும் போது நகரின் இருபுறமும் ரோட்டில் நிறுத்திவிட்டு, ஓட்டல்களில் சாப்பிடவும், பொருட்கள் வாங்க செல்கின்றனர். நாள்தோறும் ஆன் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் டிராபிக் போலீசாருக்கு தொடர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. டிராபிக் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களிடம் விதிமீறி வாகன உரிமையாளர்கள், ‛முறைான பார்க்கிங் இடம்’ இருந்தால் கூறுங்கள் நாங்கள் அங்கு சென்று கார்களை நிறுத்திவிட்டு வருகிறோம் என கேட்கின்றனர். இதற்கு பதில் கூற இயலாமல் ‛டிராபிக்’ போலீசார் சங்கடத்தில் தவிக்கின்றனர்.
வாகன ஓட்டிகள், தன்னார்வலர்கள் கூறியதாவது: நகரில் ரயில்வே மேம்பால பணி நடக்கிறது. இப்பணிகளை முன்னெடுக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ‛சர்வீஸ்’ ரோடுகளை முறையாக அமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை தவிர்க்க போலீசார் தேசிய நெடுஞ்சாலை துறையில் பார்க்கி இடம் ஒதுக்க கோருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலை துறையோ இடம் ஒதுக்கீடு செய்வது எங்கள் வேலை இல்லை என கைவிரிக்கின்றனர். இதனால் போலீசார் பார்க்கிங் இடங்களை கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர்.
நகரில் நிலவும் டிராபிக் பிரச்னை தீர்க்க கலெக்டர், எஸ்.பி., நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், டிராபிக் போலீசார், நகராட்சி கமிஷனர் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ‛பார்க்கிங்’வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மல்டி லெவல் பார்க்கிங் தொழில்நுட்பத்தில் நகராட்சி பார்க்கிங் வசதி ஏற்படுத்திட வேண்டும்., என்றனர்.