எம்.ஜி.ஆர் ., உருவாக்கிய புது ராமச்சந்திராபுரம் சுகாதார சீர்கேட்டால் தவிப்பு அடிப்படை வசதியின்றி கண்டமனுார் ஊராட்சி மக்கள் அவதி
கடமலைக்குண்டு: கண்டமனுார் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய புதுராமச்சந்திராபுரம் சுகாதார சீர்கேட்டில் தவிப்பதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் கண்டமனூர் ஊராட்சியில் சுத்தம் செய்யாத வடிகால், பொது இடங்களில் குவியும் குப்பை, பராமரிப்பு இல்லாத பொதுக்கழிப்பறை ஆகியவற்றால் சுகாதார சீர்கேட்டில் மக்கள் தவிக்கின்றனர்.
இந்த ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கண்டமனூர், புதுராமச்சந்திராபுரம் ஆகிய பெரிய கிராமங்களும் ஆத்துக்காடு, ஏழாயிரம் பண்ணை ஆகிய குக்கிராமங்களும் உள்ளன. குடிநீர் விநியோகத்தில் நிலவும் குளறுபடியால் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் போதுமான அளவு கிடைப்பது இல்லை.
சுத்தம் செய்யாத சாக்கடை, எரியாத தெருவிளக்குகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஊராட்சியில் நிலவும் பிரச்னைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
கழிவுநீரால் தொற்று நோய் அபாயம்
ஸ்ரீதேவி, புதுராமச்சந்திராபுரம்: 40 ஆண்டுக்கு முன் இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின் போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.,உருவாக்கியது தான் புதுராமச்சந்திராபுரம் கிராமம்.
கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை இல்லை. ஊரின் மத்தியில் நாட்டாமைகாரத்தெரு, மேற்கு பக்கம் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயம் உள்ளது.
மழைக்காலத்தில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்வதால் பாதிப்பு அதிகமாகிறது. இப்பகுதியில் வடிகால் நீட்டிப்பு செய்து கழிவு நீரை கடத்துவதற்கு வசதி செய்யவில்லை. 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இப்பகுதிக்கு குடிநீர் வாரம் ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. தினமும் குடிநீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் வினியோகத்தில் குளறுபடி
கருப்பையா, கண்டமனூர்: அதிக மக்கள் வசிக்கும் மேலத்தெரு பகுதியில் பேவர் பிளாக் ரோடு இல்லை. தெருவின் இருபுறமும் வடிகால் வசதி செய்ய வேண்டும். ரோடு அமைக்க பலமுறை மதிப்பீடு தயார் செய்தும் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் நடக்கவில்லை.
இது குறித்து பலமுறை உயர் அதிகாரிகளுக்கும், குறைதீர்க்கும் முகாம்களிலும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இப்பகுதியில் எரியாத தெரு விளக்குகளை சரி செய்யவும், கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குன்னூர் கூட்டு குடிநீர், வள்ளல் நதி கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்தும் வினியோக குளறுபடியால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
குளத்தில் ஊராட்சி கழிவுநீர் கலப்பு
அங்குச்சாமி, சமூக ஆர்வலர், கண்டமனுார்: 17.5 ஏக்கர் பரப்புள்ள பரமசிவன் கோயில் குளம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
அரசு நிதியை எதிர்பார்க்காமல் பொதுமக்கள் பங்களிப்பில் 2017ம் ஆண்டு ரூ.26 லட்சம் செலவில் குளத்தை புதுப்பித்து இன்றளவும் மழைநீர் தேக்கப்படுகிறது. தற்போது ஊரின் ஒட்டுமொத்த கழிவுநீரும் குளத்தில் தேங்கி தண்ணீர் விஷம் போல் மாறி வருகிறது.
கழிவு நீர் கலப்பதை ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். தெற்கு சாவடி தெருவில் சாக்கடை உடைப்பால் கழிவு நீர் தெருக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. குளக்கரையில் மருத்துவ கழிவு, கறிக்கோழி கடை கழிவுகள், கிராமத்தில் குவியும் குப்பையையும் கொட்டுகின்றனர்.
குடிநீர் மேல்நிலைத் தொட்டி செல்லும் பாதையை திறந்த வெளி கழிப்பிடமாக்கி விட்டனர். பெண்கள்
பொதுக்கழிப்பறைகள் பராமரிப்பின்றி பூட்டி வைத்துள்ளனர். கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய தெருவிளக்குகள் தேவைப்படுகிறது.
குடிநீர் பம்ப் ஆப்ரேட்டர்கள் இல்லை. ஆப்ரேட்டர்களை நியமித்து குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும்.
கிராமத்தில் 7 பொதுக்கிணறுகள் 30 போர்வெல்கள் உள்ளன. அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.