Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

அரசு மூலம் ஜெர்மனியில் நர்ஸ் பணிக்கு தேர்வானோர் தவிப்பு மொழிப்பயிற்சி துவங்காததால் தாமதம்

தேனி:தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் ஜெர்மனியில் நர்சிங் வேலைக்கு தேர்வானவர்களுக்கு மொழிப்பயிற்சி வகுப்புகள் துவங்காததால் தேர்வானவர்கள் வேலைக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலை ஏற்படுத்தி தரப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் பி.எஸ்சி., நர்சிங் படித்து, ஒரு ஆண்டு அனுபவமுள்ள, 35 வயதிற்குட்பட்டவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு 8 மாதங்களுக்கு ஜெர்மன் மொழிப்பயிற்சி சென்னையில் வழங்கப்படும். அதன்பின் அரசு மூலம் நர்சிங் பணிக்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நர்சிங் முடித்த பலரும் ஜெர்மனியில் பணிபுரியும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதில் 250 வரை தேர்வாகினர். இவர்களுக்கு 2024 நவ.,ல் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஜெர்மன் மொழிப் பயிற்சி வகுப்புகள் இதுவரை துவங்கப்படவில்லை. தேர்வானவர்கள் எப்போது மொழிப்பயிற்சி முடித்து ஜெர்மனிக்கு வேலைக்கு செல்வோம் என கேள்வி எழுப்புகின்றனர்.

பயிற்சி வகுப்பை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க வேண்டும் என்பதால் துவக்க விழா தள்ளி போகிறது. பயிற்சி எப்போது துவங்கும் என அறிய திட்ட சேவை மையத்தை தொடர்பு கொண்டாலும் அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை. இதனால் வெளிநாடு வேலைக்கு தேர்வானவர்கள் தவிப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *