தேனி பஸ் ஸ்டாண்டில் முடங்கிய மாற்றுப் பாதை திட்டம்; அரசியல் குறுக்கீட்டால் அமல்படுத்த தயக்கம்
தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை தவிர்க்க அனைத்து பஸ்களும் மேற்கு புற நுழைவாயில் வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்லும் வகையில் திட்டம் நிறைவேற்ற அதிகாரிகள் ஆலோசித்தனர். பின் அரசியல் குறுக்கீட்டால் அந்த திட்டம் இதுவரை கானல் நீராக உள்ளது.
தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் 3 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் முதல் இரு பிளாட்பாரங்களில் மதுரை, போடி, திண்டுக்கல், திருச்சி, மூணாறு செல்லும் பஸ்களும், 3வது பிளாட்பாரத்தில் திருப்பூர், கோவை, டவுன் பஸ்கள் நின்று செல்கின்றன. இதில் முதல் இரு பிளாட்பாரங்களுக்கு செல்லும் பஸ்கள் மேற்குபுற நுழைவாயில் வழியாக பஸ் ஸ்டாண்டிற்குள் செல்கின்றன. ஆனால் 3வது பிளாட்பாரத்திற்கு செல்லும் பஸ்கள் உள்ளே செல்லவும், வெளியேறவும் ஒரே நுழைவாயில் மட்டும் உள்ளது. இதிலும் சில பஸ் டிரைவர்கள் நடுரோட்டில் பயணிகளை ஏற்றி, இறக்குவது தொடர்கிறது. இதானல் கலெக்டர் அலுவலக ரோட்டில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
இதனை தடுக்க மூன்றாவது பிளாட்பாரத்திற்கு செல்லும் பஸ்கள் மேற்குபுற நுழைவாயில் வழியாக உள்ளே வரும் வகையில் கடந்தாண்டு மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டனர். இதற்காக சில வெளியூர் பஸ்கள் நிறுத்துமிடம் மாற்றப்பட்டன. பின்னர் அரசியல் நெருக்கடியால் பஸ் ஸ்டாண்ட் பழைய நிலைக்கே திரும்பியது. இதனால் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. அதிகாரிகள் அந்த வழியாக பயணித்தாலும் கண்டு கொள்ளாமல் செல்கின்றனர். திட்டமிட்டவாறு அரசியல் நெருக்கடிகளை கடந்து அனைத்து பஸ்களும் மேற்குபுற நுழைவாயில் வழியாக செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம், தேனி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.