தங்க நகைகள் செய்து தருவதாக ரூ.74.75 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு
தேனி:தேனியில் ஜவுளி வியாபாரி சுந்தர் 40, என்பவரிடம் தங்க நகைகள் செய்து தருவதாக கூறி ரூ.74.75 லட்சம் ஏமாற்றிய அதே பகுதியை சேர்ந்த ரேவதி, பூமிகா, திண்டுக்கல் மாவட்டம், எழுவனம்பட்டி வீரன், மதுரை மாவட்டம் வெற்றிவேல், நாகபட்டிணம் மாவட்டம் பாலசுப்பிரமணியம் ஆகிய 5 பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியை சேர்ந்த சுந்தர் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தினார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த ரேவதி, இவரது மகள் பூமிகா ஜவுளி வாங்கி விற்பனை செய்தனர். இவர்கள் சுந்தரிடம், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரனை அறிமுகம் செய்தனர்.
மதுரை வெற்றிவேல் என்பவரிடம் தங்க பிஸ்கட்கள் உள்ளன. அதனை வாங்கி பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்து புதிய டிசைன்களில் நகைகள் செய்து தருவதாக சுந்தரிடம் வீரன் கூறினார். இதற்காக நகை டிசைன்கள் அடங்கிய புத்தகத்தை காட்டினார். இதனை நம்பிய சுந்தர் ஜனவரியில் 125 பவுன் தங்க நகைக்காக ரூ.74.75 லட்சத்தை பல தவணைகளில் 5 பேரின் வங்கி கணக்கு, ரொக்கமாக வழங்கினார்.
பணத்தை பெற்றுக்கொண்ட 5 பேரும் நகைகள் செய்து தராமலும், பணத்தை தராமலும் ஏமாற்றினர். சுந்தர் தேனி எஸ்.பி., சிவபிராத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில் ரேவதி, பூமிகா, வீரன், வெற்றிவேல், பாலசுப்பிரமணியம் ஆகிய 5பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.