பள்ளியில் கவனம் குறைந்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு
தேனி: மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களை படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 222 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இந்தாண்டு அரசுப் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதில் சில மாணவர்கள் படிப்பில் கவனக் குறைவாகவும், சிலர் ஒரு சில பாடங்களில் பின் தங்கியும் உள்ளனர். இம் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கூடுதலாக பயிற்சி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையினர் கூறுகையில், ‘அரையாண்டு தேர்வு முடிவுகள் வந்த பின், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம். இதில் கவனம் குறைந்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்குவது, சில பாடங்களில் மட்டும் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை, அதிக மதிப்பெண்கள் பெற வைப்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.’, என்றனர்.