தீபாவளி சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி ஐவர் மீது வழக்கு
தேனி: தேனியில் தீபாவளி சீட்டு நடத்தி 40 பேரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தேனி மேலக்கூடலுாரை சேர்ந்தவர் தமிழரசி 64 இவரின் வீட்டின் அருகே சண்முகப்பிரியா 50, வசிக்கிறார்.
சண்முகப்பிரியா அவரது குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு நடத்துவதாகவும்,இதில் வாரந்தோறும் ரூ.500 வீதம் 52 வாரங்கள் ரூ.26 ஆயிரம் செலுத்தினால், 52வது வாரத்தின் முடிவில் ரூ.31,500 வழங்கப்படும் என, தமிழரசியிடம், சண்முகப்பிரியா தெரிவித்தார். இதன்படி தமிழரசியும், அவரது குடும்பத்தினரும் ரூ.4.85 லட்சம் செலுத்தினர்.
இதுதவிரசண்முகப்பிரியாவின் தீபாவளி சிறுசேமிப்புத் திட்டத்தில் 39 பேர் இணைந்து ரூ.18.15 லட்சம் செலுத்தினர்.ஆக மொத்தம் ரூ.23 லட்சத்தை பெற்று சண்முகப்பிரியா, அவரது மகள்கள் மவுனிகா, அஜிதா, மகன் தீபக்ராஜ், அஜிதாவின் கணவர் கர்ணன் ஆகிய ஐவர் இணைந்து மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட தமிழரசி, தேனி எஸ்.பி.,சிவபிரசாத்திடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவில் மாவட்டகுற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, மோசடியில் ஈடுபட்ட சண்முகப்பிரியாஉட்பட ஐவர் மீது மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.