விசைத்தறி தொழிலாளர் ஸ்ட்ரைக்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 3500க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 6000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு இரு ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.
கடந்த முறை ஏற்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பர் 31ல் முடிந்தது. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மூலம் வலியுறுத்தினர். விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனை தொடர்ந்து கூலி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 1 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். பிரச்னை தொடர்பாக திண்டுக்கல்லில் தொழிலாளர் துணை ஆணையர் சுப்பிரமணியன் முன்னிலையில் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
மீண்டும் ஜனவரி 21ல் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடன்பாடு ஏற்படாததால் விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 7வது நாளாக தொடர்கிறது.