பேரிச்சை சாகுபடிக்கு மானியம்
தேனி : ‘தோட்டக்கலைத்துறை சார்பில் பேரிச்சை சாகுபடி செய்ய மானியத்துடன் 3 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டேருக்கு மானியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும்.’ என, தோட்டக்கலைத் துணை இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பேரிச்சை வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பாறைப் பகுதிகள், மணற்பாங்கான இடங்களிலும் சாகுபடி செய்யலாம். பேரிச்சையில் பர்ஹீ, அஜ்வா, எலைட், ஷம்ரன், மெட்ஜீல், ஜாகிடி, ஹலாவி, கத்ராவி, கலாஷ் ஆகிய ரகங்கள் உள்ளன. இதில் பர்ஹீ தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்கு பின் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
ஒரு ஏக்கருக்கு 76 கன்றுகள் நடவு செய்யலாம். பூக்கத் துவங்கி 120 நாட்களில் அறுவடை செய்யலாம். கன்றுகள் நடவு செய்து 3 ஆண்டுகளில் இருந்து அறுவடை செய்யலாம். ஒவ்வொரு மரத்தில் இருந்தும் ஆண்டிற்கு 100 கிலோ முதல் பழங்கள் கிடைக்கும். பேரிச்சை நுாற்றாண்டு பயிராகும். ஆர்வமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்., என்றார்.