தைப்பொங்கல் தொகுப்பு பெற கிராமங்களில் ஆர்வம் இல்லை.
ஆண்டிபட்டி : தமிழக அரசின் தைப்பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு கிராம மக்களிடம் ஆர்வம் இல்லை.
தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, கரும்பு, சேலை, வேட்டி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பொங்கல் தொகுப்பில் பல்வேறு பொருட்களுடன் பணமும் வழங்கப்பட்டது. ரேஷன் கடைகளில் நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கி குறிப்பிட்ட தேதியில் பணத்துடன் பொங்கல் பொருட்கள் கிடைக்கும் படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆளும் கட்சியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் பலரும் தங்களை முன்னிலைப் படுத்தி பொதுமக்கள் பணத்துடன் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். நடப்பு ஆண்டில் பொங்கல் தொகுப்பில் முந்திரி பருப்பு, உலர்திராட்சை, ஏலக்காய் இடம் பெறவில்லை.
குறிப்பாக பொங்கல் தொகுப்பில் பணம் வழங்காதது பொது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வெளியூர்களில் வசிக்கும் பொது மக்கள் பொங்கல் விடுமுறையில் வந்து பொங்கல் தொகுப்பு வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பல கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பெற காத்திருந்து வரிசையில் நிற்பதை எங்கும் பார்க்க முடியவில்லை