ஆண்டிபட்டி பகுதி மானாவாரியில் அறுவடை ஆரம்பம்: விளைச்சல் குறைவால் விவசாயிகள் ஏமாற்றம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் மானவாரி நிலங்களில் அறுவடை சீசன் ஆரம்பித்துள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே முக்கிய தொழிலாக உள்ள ஆண்டிபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் விவசாயிகள் தென்மேற்கு பருவ மழையை நம்பி ஆகஸ்ட், செப்டம்பரில் விதைப்பு பணிகளை துவக்கினர்
நூற்றுக்கணக்கான கிராமங்களில் விவசாயிகள் தட்டை, மொச்சை, பாசி, உளுந்து, காணம், துவரை வகைகளையும், சிறுதானியங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு வகைகளையும் எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, ஆமணக்கு, எள் வகைகளையும் விதைப்பு செய்திருந்தனர். கடந்த நான்கு மாதங்களில் பயிர்கள் முதிர்ச்சி அடைந்து அறுவடை நிலைக்கு வந்துள்ளன. தற்போது பல்வேறு கிராமங்களிலும் அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். வைகை ஆற்றின் கரையோர கிராமங்கள், நிலத்தடி நீர் அதிகமாக உள்ள இறவை பாசன நிலங்களில் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்களும் தற்போது வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. விவசாயிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையாபுரம், அனுப்பபட்டி, ஏத்தக்கோயில், சித்தையகவுண்டன்பட்டி, மறவபட்டி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ராயவேலூர், அழகாபுரி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. துவரை செடிகளில் காய் முழு வளர்ச்சிக்கு இன்னும் ஓரிரு வாரங்கள் பிடிக்கும் என்பதால் அறுவடைக்கு தாமதம் ஆகும். நடப்பு ஆண்டில் பயிர்களின் வளர்ச்சிக்கான மழை குறிப்பிட்ட இடைவெளியில் பெய்யவில்லை. ஓரிரு நாட்களில் பெய்த அதிக மழை பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் விளைச்சல் குறைந்துள்ளது. விளைச்சல் கிடைக்காத சோளம், கம்பு போன்ற சிறு தானிய பயிர்களை தீவனத்திற்கு விவசாயிகள் இருப்பு வைக்கின்றனர்.
மானாவாரி பயிர்களுக்கு நடப்புப் பருவத்தில் தேவையான நேரங்களில் மழை கிடைக்கவில்லை.
ஒரே நாளில் அதிக மழைப்பொழிவு பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. கடந்த சில மாதங்களில் மானாவாரி விவசாயிகளுக்கு உழைப்புக்கான ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.