Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பொங்கல் தொகுப்பில் வழங்கிய கரும்பிற்கு பட்டு வாடா எப்போது: பணம் வரவில்லை என விவசாயிகள் புலம்பல்

கம்பம்: பொங்கல் பரிசு தொகுப்பிற்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த செங்கரும்பிற்கு இன்னும் பணம் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள 517 ரேஷன் கடைகள் மூலம் 4.27 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்கப்படும் என அறிவித்தது. இதன்படி சின்னமனுார், பெரியகுளம், தேனி தாலுகாக்களில் செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளிடமிருந்து மாவட்ட கூட்டுறவு துறை நேரடியாக கொள்முதல் செய்தது. ஜனவரி முதல் வாரத்தில் கொள்முதல் செய்வதை துவக்கினர். இதில் சின்னமனூரில் 2 லட்சம் கரும்பு, பெரியகுளம் பகுதியில் 2 லட்சம் தேனி பகுதியில் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அரசு கரும்பு கொள்முதல் செய்வதற்காக மாவட்டத்திற்கு பொங்கலுக்கு முன்பே ரூ.1.49 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கியது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செங்கரும்பு கொள்முதல் வேளாண் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு கொள்முதல் செய்தனர். கடந்தாண்டு முதல் கரும்பு கொள்முதல் கூட்டுறவு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் வேளாண் துறை சாகுபடி செய்துள்ள கரும்பின் தகுதியை பரிந்துரை செய்தனர். கொள்முதல் மற்றும் பணப்பட்டுவாடா கூட்டுறவு துறை மேற்கொண்டது.

ஒரு கரும்பின் விலை ரூ.35 என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஒரு கட்டு கரும்பிற்கு (10 எண்ணம் கொண்டது) போக்குவரத்து கட்டணம் ரூ.80 பிடிக்கப்படுகிறது. ஒரு கட்டு கரும்பு ரூ.350ல் ரூ.80 போக ரூ.270 பாக்கி வழங்க வேண்டும். கரும்பு வெட்டி சென்று 10 நாட்கள் ஆகியும் விவசாயிகளுக்கு இதுவரை பட்டுவாடா செய்யவில்லை. அதில் கட்டுக்கு ரூ.20 வீதம் ‘வெட்டு’ விழும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். வேளாண் துறை கொள்முதல் செய்த போது, பொங்கலுக்கு முதல் நாளே விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவானது. ஆனால் இந்தாண்டு இன்னமும் பணம் கிடைக்கவில்லை என புலம்புகின்றனர்.

கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கான செங்கரும்பு கொள்முதலில் விவசாயிகள் எவ்வளவு கரும்பு வழங்கி உள்ளனர் என கணக்கிடும் பணியும், அவர்களின் வங்கி கணக்குகள் சரிபார்ப்பு பணி துவங்கி உள்ளது.

பொங்கல் விடுமுறை முடிந்து தற்போது தான் வங்கிகள் செயல்பட துவங்கி உள்ளன. மூன்று தினங்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *