Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டு பயிற்சி வழங்க வேண்டும் விலை குறையும் காய்கறி, பழங்கள் வீணாவதை தவிர்க்க மாத்தி யோசிங்க

தேனி: மாவட்டத்தில் விலை குறையும் போது காய்கறி, பழங்கள் வீணாவதை தவிர்க்கும் வகையில் மதிப்புக்கூட்டு பயிற்சி கிராமம் தோறும் வழங்க வேளாண் துறை நடவடிக்கை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் காய்கறிகள்,வாழை, திராட்சை, மா, தென்னை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் 25 ஆயிரம் எக்டேருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இருந்து தக்காளி, வெங்காயம், கத்தரி, மாங்காய், முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் அருகில் உள்ள மாவட்டங்கள், கேரளா, சில காய்கறி, பழங்கள் கொச்சி விமான நிலையம் மூலம் வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

மாவட்டத்தில் வாழை 6500 எக்டேரில் சாகுபடி செய்து சுமார் 40 ஆயிரம் டன் ஏற்றுமதியாகிறது. மா சாகுபடி 10 ஆயிரம் எக்டேரில் நடக்கிறது.

பருவ மழைகாலம், கோடை மழை காலங்களில் காய்கறிகள் வரத்து குறைகிறது.

அப்போது காய்கறிகள் விலை அதிகரிக்கிறது. ஆனால், வரத்து அதிகரிக்கும் போது காய்கறிகள் விலை மிகவும் குறைகிறது. உதாரணமாக வரத்து குறைந்த நேரத்தில தக்காளி கிலோ ரூ. 80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது.

வரத்து சீராக உள்ள போது கிலோ ரூ. 20-30 வரை விற்பனையாகிறது. வரத்து அதிகரித்தால் கிலோ ரூ.10, அதற்கும் கீழ் விற்கப்படுகிறது. இதே நிலை கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளுக்கும் இந்த நிலை உள்ளது.

காய்கறி, பழங்கள் விலை குறையும் காலங்களில் விவசாயிகளுக்கு விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவு கூட கிடைப்பதில்லை. இதனால் பலர் விளை பொருட்களை கீழே கொட்டி செல்வதும் தொடர்கிறது.

இதனை தவிர்க்க தோட்டக்கலை, வேளாண் துறையினர் விளைபொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க கிராமங்களில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும். வேளாண் துறை சார்பில் குறிப்பிட்ட விவசாயிகளை சமீபத்தில் கேரளாவிற்கு அழைத்து சென்று மா, பலாவில் மதிப்புக்கூட்டு பயிற்சி வழங்குவதை பார்வையிட செய்கின்றனர். அதே போல் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும்

அழைத்து செல்கின்றனர்.

இதனால் தேனி மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. கிராமங்களில் தக்காளி ஜாம், மாங்காய் ஊறுகாய், மாம்பழக்கூழ், திராட்சை ஜூஸ் தயாரித்தல் பயிற்சி அதற்கு உரிய கருவி அமைத்து விவசாயிகளுக்கு நேரடி செயல் முறை பயிற்சி வழங்க வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *