‘அட்மா ‘ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இன்றி சுணக்கம்
கம்பம்: ‘அட்மா’ திட்டங்கள் நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால் அதிகாரிகளும், பணியாளர்களும் சுணக்கத்தில் உள்ளனர்.
வேளாண் துறையில் அட்மா திட்டம் 2005ல் துவக்கி வைக்கப்பட்டது. வேளாண் துறையில் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை விளக்கிடவும், வேளாண் கண்காட்சிகள் நடத்தவும், வேளாண் பள்ளி நடத்தவும், விவசாயிகளை கண்டுணர்வு சுற்றுலா அழைத்து செல்லவும் இந்த திட்டம் உதவுகிறது. ஒவ்வொரு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அட்மா அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஒருவரும், உதவி தொழில் நுட்ப மேலாளர் என இரு பணியிடங்கள் என மொத்தம் 3 பேர்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அட்மா பணியாளர்களுக்கு சம்பளமே வராமல் இருந்து சமீபத்தில் கிடைத்தது. தற்போது திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அனுமதிக்கப்படவில்லை. அலுவலர்களால் நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட எந்த பணியும் மேற்கொள்ளவில்லை.
இதனால் அட்மா திட்டம் முடங்கியுள்ளது. இதனால் பணியாளர்களும் வேலையின்றி உள்ளனர். மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, அட்மா திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பெற்றுத் தர கோரிக்கை எழுந்துள்ளது.